Tuesday, November 6, 2007

சைக்கிளில் செல்லும் டாக்டர்...காரில் வரும் பேஷண்டுகள்!


சிறிய வீடு போன்ற தோற்றமளிக்கும் க்ளினிக். ஜே ஜேவென்று பேஷண்டுகளின் கூட்ட நெரிசல். திடீரென்று ஒருவர் படு ஸ்பீடாக சைக்கிளில் வருகிறார். எல்லோரும் எழுந்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு அமர, பதிலுக்கு அந்த நபரும் புன்சிரிப்பை பரிசளித்துவிட்டு வந்து உள்ளே அமர்கிறார்.
.
நோயாளிகள் வரிசையாகச் சென்று, நோய்களைப் பற்றிக் கூறியதும் அவர் உடனே அந்த நோயாளியின் கையில் இன்ஜெக்ஷனை போடுகிறார். உடனே அந்த பேஷண்ட் ஐந்து ரூபாய் சில்லறையை எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்கிறார். அடுத்த நோயாளி அவரிடம் நோய் பற்றி விவரிக்க ஆரம்பிக்கிறார். இது ஏதோ பிரபல எழுத்தாளர்களின் மருத்துவச் சிறுகதை அல்ல. இந்தக் கணினி காலத்தில் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்.
.
சென்னையிலிருந்து ஈசிஆர் ரோடு வழியாகச் சென்றால் வரவேற்கிறது மகாபலிபுரம். அங்கிருந்து அப்படியே வலது புறமாக 1 கிலோ மீட்டர் தூரம் சென்றால் கல்பாக்கம் அருகே வெங்கம்பாக்கம் என்கிற அழகிய சிற்றூர். சட்ராஸ் க்ளினிக் என்றால் சின்னக் குழந்தைகூட வழியைக் காண்பிக்கும். அந்த அளவுக்கு படு ஃபேமஸாக இருக்கிறது. அந்த க்ளினிக்கின் ஹீரோதான் வியர்வை பொங்க சைக்கிளில் வந்து இறங்கும் டாக்டர் புகழேந்தி.
.
சாதாரணமாக ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரிடம் சென்றால் கன்சல்ட்டிங் ஃபீஸே ஐம்பது ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்குபிறகு மருந்து, மாத்திரை, இன்ஜெக்ஷன் செலவு எவ்வளவு ஆகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இவரோ கன்சல்ட்டிங் ஃபீஸ் வாங்குவதே இல்லை. மருந்து, மாத்திரை, இன்ஜெக்ஷன் செலவு எல்லாம் சேர்த்து இருபது ரூபாய்க்குள் சிகிச்சை பெற்று திருப்தியோடு செல்கிறார்கள் நோயாளிகள்! இது எப்படி சாத்தியம்? டாக்டர் புகழேந்தியிடமே கேட்டோம்.
.
எந்த ஒரு தொழிலுமே லாபம் இல்லாமல் இல்லை. ஆனால் லாபம் வேறு, கொள்ளை லாபம் வேறு. நான் லாபத்துக்கு எதிரானவன் அல்ல. கொள்ளை லாபத்திற்கு எதிரானவன். உதாரணத்துக்கு பத்து மாத்திரைகள் அடங்கிய பி.பி. மாத்திரையின் ஸ்ட்ரிப் 17 ரூபாய் 40 பைசா. அதையே இன்னொரு கம்பெனி 25 ரூபாய் என்று தயாரித்து விற்பனை செய்கிறது. அதை மாத்திரை டாக்டர்களுக்கென்று வரும்போது 4 ரூபாய் 50 பைசாதான். இந்த மாத்திரையை மூன்று ரூபாய்க்குமேல் இதுபோன்று எல்லா மாத்திரை மருந்துகளுக்கும் எனக்கு வரும் விலையோடு மூன்று ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை சேர்த்து கொடுக்கிறேன். அதனால்தான் பலர் என்மீது கோபம் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனசார வாழ்த்திவிட்டுப் போகும்போது எனக்குள் ஏற்படும் ஆத்ம திருப்தி அதையெல்லாம் நிறைவாக்கிவிடும்.
.
எப்படி உங்களால செய்யமுடியுது? வருமானத்துக்கு என்ன செய்றீங்க? வாடகை எப்படி கொடுக்குறீங்க? உங்களுக்கு ஏதாவது ஃபண்ட் வருதான்னு கேட்கிறார்களே தவிர நம் நாட்டில் கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவர்களை மறந்து போய்விடுகிறார்கள். அரசாங்கத்தின் உள்நோக்கங்களைப் பற்றியும் புரிந்துகொள்வதில்லை.
.
பி.பி. மாத்திரை என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஓர் பிரச்னை. மாத்திரை போட்டு அப்படியே குணப்படுத்தக்கூடியது அல்ல. கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட வியாதிகளால் மக்கள் அல்லல்படுகிறார்கள். அப்படிப்பட்ட நோய்களுக்கு அரசே ஏன் மருந்து மாத்திரைகளை தயாரித்து விநியோகம் செய்யக்கூடாது? தனியார் கம்பெனிகள் தயாரித்து மருத்துவர்களிடம் விற்க, மருத்துவர்கள் மக்களிடம் விற்று பணம் பார்க்கிறார்கள் என்பதை அரசு ஏன் உணர்ந்து செயல்படக்கூடாது?
.
அடுத்து போலியோவை எடுத்துக்கொண்டால் அதிலும் பிரச்னை. போலியோ சொட்டு மருந்து போடுவதாலேயே போலியோ வரும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நான் சொன்னால் என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள புரளியைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பார்கள். ஆனால் இந்தத் தகவலை இந்து ஆங்கில பத்திரிகையில் இந்தியன் மெடிக்கல் அசோசியனின் வைஸ் பிரசிடென்ட் ஆன டாக்டர். ஜேக்கப் புலியெல்தான் வெளியிட்டுள்ளார். அதுவும் அவர் கூறும்போது, இந்தியா முழுக்க சொட்டு மருந்து கொடுத்ததில் 2006_ல் 1500 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், 27,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார். என்ன கொடுமை பாருங்க. போலியோ வேக்ஸின் கொடுப்பதால்கூட போலியோ வரும் என்பதை அரசாங்கம் மக்களுக்கு முழுமையாகச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் மக்கள் பயந்துகொண்டு போலியோ சொட்டு மருந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்களே? சொட்டு மருந்தைப் போடுவதால் பல கோடி மக்கள் போலியோவால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறதே? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
.
நான் ஒரு கேள்வி கேட்கிறேன். போலியோவைத் தடுக்க சொட்டு மருந்து மட்டும்தான் இருக்கிறதா? இல்லை. இன்ஜெக்ஷன் முறையில் செலுத்துவதுதான் சிறந்தது. காரணம் சொட்டு மருந்தில் செலுத்தப்படும் மருந்தில் உயிருள்ள கிருமி இருக்கும். அதுவே இன்ஜெக்ஷன் வழியாக செலுத்தப்படும்போது கிருமி இறந்து போனதாக இருக்கும்.
.
அதைவிட முக்கியமான விஷயம் போலியோவை மட்டுமல்ல, நீரினால் பரவக்கூடிய பல வியாதிகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் சுத்தமான குடிநீரைக் கொடுத்தாலே போதும். வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படும் கிருமிகளிலிருந்து பாதுகாக்க முடியும். போலியோ சொட்டு மருந்துக்காக 300 கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும். தமிழ்நாட்டில் சிவகாசியில் கூட (24 டிசம்பரில்) போலியோ சொட்டு மருந்து கொடுத்து 3 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை குமுதம் ரிப்போர்ட்டர்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
அடுத்தது ஒரு நாட்டின் ஹெல்த் பாலிஸி என்பது எப்படி இருக்கவேண்டும்? மக்களுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும். ஆனால் நம் நாட்டில் அப்படி எதுவும் இல்லை.
.
உலகிலேயே 88% கருவுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை உள்ள நாடு இந்தியா என்று புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னை திரிசூலத்தில் 12 வயதிலேயிருந்து 18 வயது வரை உள்ள 93 பெண்களை ஆய்வு செய்ததில் ஐந்து பேருக்குதான் இரத்த சோகை இல்லையாம்.
.
இப்படி இந்தியாவில் இருக்க, குறைந்த பட்சம் அதற்கான மாத்திரை விலையைக் குறைத்திருக்கலாம். ஆனால் அயர்ன் இன்ஜெக்ஷன் மற்றும் அயர்ன் டேப்ளட்களின் விலையைக் கூட்டியிருக்கிறது. இதிலிருந்தே நமது நாட்டின் ஹெல்த் பாலிஸி எந்த அளவுக்கு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
.
அடுத்து கார்ப்பரேட் மெடிசன் பற்றி சொல்லியே ஆகணும். மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னை வைரஸ் ஃபீவர். இதனால ஜுரம், தும்மல், உடம்பு வலி என்று ஒரே இடத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக்கொள்ளும். இதில் புதைந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் வைரஸ்க்கு நிரந்தர தீர்வுகளும் மருந்தும் கிடையாது. ஆனால் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், இன்ஜெக்ஷன்கள் என செய்வது போல மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களெல்லாம் உண்மையான டாக்டர்கள்தானா? நிச்சயமாக போலி டாக்டர்கள்தான் என்று முத்திரை குத்த வேண்டும்.
.
ஏதாவது ஒரு நோய் என்றாலே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; மருத்துவரைப் பார்க்க வேண்டும்; பரிசோதித்துக் கொள்ளவேண்டும்; மருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். இதைத் தாண்டி மக்களை ஏன் சிந்திக்க வைக்க மறுக்கிறார்கள். இதைத் தாண்டி மருத்துவர்கள் ஏன் பேசுவதில்லை என்பது அவர்களுக்கே தெரியும். சுத்தமான உணவு, காற்றோட்ட வசதியுள்ள வீடு என நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொண்டாலே வைரஸ் தொற்று நம்மை தாக்குவதில்லை. அதேபோல் உலகத்திலேயே பெரும் பங்கு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டீ.பியின் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது என்றும், மருந்துகள் பெருமளவு பலனளிக்கவில்லை என்பதுவும்தான் உண்மைநிலை. அதேபோல் இந்நோய்க்கு எது கொடுத்தால் குணமாகுமோ அதெல்லாம் கொடுக்காமல் தேவையற்ற மருந்துகளைக் கொடுத்து காசு பார்க்கிறார்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளில். இதுதான் கார்ப்பரேட் கலாச்சாரம்.
.
அதேமாதிரிதான் சிக்குன் குன்யா. அதுமட்டுமல்ல கொசுவினால் பரவக்கூடிய எந்த வியாதியாக இருந்தாலும் அதுக்கு மூலகாரணம் என்ன என்பதை கண்டுகொள்ளாமல் கொசுவை ஒழிக்க பலதிட்டங்களை தீட்டி பணத்தைச் செலவு செய்கிறார்கள். கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்குக் காரணம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதே. அப்படி பூமி வெப்பம் அடைவதற்குக் காரணம் ஆலைக்கழிவுகள், மரங்களை அழித்தல், அனல்மின் நிலையம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல் நிச்சயமாக கெமிக்கல் மூலம் கொசுமருந்து அடிப்பதால் கொசு அழியாது. எனவே கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க வழி என்ன என்பதை சிந்திப்பதே சிறந்தது என்று அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தவரை கொஞ்சம் கூல் படுத்தினோம்.
.
சரிங்க, எம்.பி.பி.எஸ். படிச்சுட்டு இந்தளவுக்கு துடிப்போடு செயல்படுறதுக்கு என்ன காரணம்? எப்படி உங்களால் செயல்பட முடியுது என்று அவரது பர்சனல் டைரியைப் புரட்டினோம்.
.
என்னுடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அம்மா லட்சுமி. அப்பா வீராசாமி. ஓர் அண்ணன் பாரி. அக்கா மணிமேகலை, அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறார். நான் படிக்கும் போதே கிராமப்புற சேவை செய்ய வேண்டும் என்கிற ஆவல் எனக்குள்ளே கனன்று கொண்டிருந்தது. அந்த நெருப்பை இன்னும் தீப்பற்றி எறியச் செய்தது எனது பெற்றோர்தான். காரணம், அம்மா காந்தியவாதி. அப்பா தி.க. இருவரும் மிகவும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
உனக்கு ஏம்பா இந்த வேண்டா வேலை. நல்லாப் படிச்சிருக்கே, உனக்கு நல்லாத் திறமை இருக்கு. பேசாம உங்கக்கா மூலமா அமெரிக்காவுக்கு போவியா! இங்க கிடந்து கஷ்டப்பட்டுகிட்டு சேவை செஞ்சுக்கிட்டு... என்று அநேகர் எனக்கு புத்தி சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் தள்ளு என்று தள்ளிவிட்டிருக்கேன். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்து பெயர் வாங்க வைத்த கோயம்புத்தூரிலுள்ள எனது நண்பன் டாக்டர் ரமேஷ் மற்றும் எனது ஆசிரியர்களான வி.வெங்கட்ராமன், ஆர். சுப்பிரமணியம், திருமலை சுப்பிரமணியம், சமூக ஆர்வலர் செல்லபாண்டியன் ஆகியோரை மறக்கவே முடியாது என்று மெய்சிலிர்த்தவருக்கு போனவருடம் தான் திருமணம் ஆகியிருக்கிறது.
.
என் மனைவி சுகுணா. என்னில் ஒரு பாதி. என் சேவைகளுக்கு என்றும் தடைபோடாமல் ஊக்குவிப்பவள். அடுத்து என் பகுதி மக்கள். இப்போதான் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் என்னைப் பற்றி வருவதால். ஆனாலும் என்னிடம் வந்தால் செலவு குறைவாக இருக்கிறது; சிகிச்சையும் பலனளிக்கிறது என்று வருகிறார்களே தவிர என்னை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். உண்மையைப் பேசினால் வித்தியாசமானவன் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்றவரிடம் நீங்க ஏன் சைக்கிளில் வர்றீங்க என்றோம். பளீரென்று சிரிக்கிறார். எப்போதுமே என்னுடைய செலவுகளை குறைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பேன். அதனால்தான் என்னால் சுயசார்புடன் யாருடைய தயவையும் நம்பாமல் சந்தோஷமாக வாழ முடிகிறது. அதுவும் சைக்கிளில் வருவதால் உடல் ரீதியாகவும் ஒரு உடற்பயிற்சி ஏற்படுகிறது. காற்றையும் மாசுபடுத்தாமல் இருக்கிறேன் என்ற திருப்தி ஏற்படுகிறது.
.
ஆரம்ப சுகாதார மருத்துவமணை 50 மீட்டர் தொலைவில் இருந்தாலும் என்னிடம் வருகிறார்கள் என்றால், தேவையற்ற மருந்துகளை எழுதிக் கொடுத்து செலவுகளை அதிகப்படுத்துவதும் இல்லை. காரணம் Father of Medician William Astler சொல்வது போல் நோயாளிகளின் மூலம்தான் ஒரு மாணவன் முழு மருத்துவனாகிறானே தவிர புத்தகத்தால் மட்டுமே அல்ல என்கிறார். அப்படிப்பட்ட நோயாளிக்கு துரோகம் செய்யலாமா?
அடேங்கப்பா!
- ம.மனோ
நன்றி: குமுதம் ஹெல்த்

5 comments:

சுந்தரா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மரு.புகழேந்தி!

உங்கள் சிறப்பான சேவையும், சீரிய சிந்தனையும் என்றும் இடையூறின்றித் தொடரட்டும்.

profanbu.blogpost.com said...

பணி சிறக்க வாழ்த்துகள்

profanbu.blogpost.com said...

பணி சிறக்க வாழ்த்துகள்

Unknown said...

THANK YOU VERY VERY MUCH SIR

Unknown said...

மனித நேயம் மிக்க மனிதனுக்கு சல்யூட்